வெள்ளி, 25 ஏப்ரல், 2014

"பிழைத்துப் போகட்டும் இக்கணம்!"

ஒன்றை ஒழிப்பது, விட்டு விலகுதல், விட்டுக்குடுத்தல்...இவை நம் கலாசாரத்தில் தொன்றுதொட்டு தொடர்ந்து வரும் வழக்கம். 

உதாரணத்திற்கு நம் தமிழ் நாட்டின் மிகமுக்கிய பண்டிகையான பொங்கலுக்கு முதல் நாள் வரும் போகிப் பண்டிகையை எடுத்துக்கொள்ளுங்கள். கழித்தல் திருநாள் அது! பழையன கழிக்கப்படும் அக்கணமே புதுமைக்கு ஒரு அழைப்பிதழ் போய்விடுகிறது!

எங்கனம் நம் வீட்டில் ஒரு பழைய பொருளைக் கழிக்கும் பொழுது, புதுவன வருவதற்கு இடம் உருவாகிறதோ, அவ்வாறே, நம் மனதிலும் பழையன கழிக்க கழிக்க, புது 'இடம்' உருவாகிறது! 

இந்த அகக்கழிவின் உருவகமே, நம் கலாச்சார வெளிப்பாடுகளான பண்டிகைகள், பழக்க வழக்கங்கள்!  

இவ்வளவு ஏன் என்னுடைய பாட்டி ஒவ்வொரு நாள் தூங்கும் முன் சொன்ன "பொழச்சுகடந்து பாப்போம்" என்பது பிழைத்துக் கிடந்தால் பார்ப்போம் என்பதன் மருவு!  உலக வாழ்வின், ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம்மை நிழலாய் தொடர்ந்து வரும் ஒரே நிதர்சனமான மரணத்தை, தழுவி எதிர்க்கொள்ளும் உன்னத - நம் இயலாமையின், கையாலாகாத்தனத்தின் புரிதலே அந்த அன்றாட "பொழச்சுகடந்து பாப்போம்"!

இந்த பக்குவம் இறத்தலில் - ஒவ்வொரு சராசரி மனிதனின் ஆழ்நிலை பய உணர்வு - இருந்தால், பிறக்கும் ஒவ்வொரு கணமும் பிழைத்துப்போகும்!